×

சூடுபிடிக்கும் கும்பாபிஷேக விவகாரம்!: பகவான் ராமரை பா.ஜ.க. அரசியல்வாதியாக்கிவிட்டது.. எதிர்க்கட்சிகள் சாடல்..!!

டெல்லி: பகவான் ராமரை பா.ஜ.க. அரசியல்வாதியாக்கிவிட்டதாக எதிர்கட்சிகள் சாடியுள்ளன. உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்படும் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மோடி, அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள், சாதுக்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்கவுள்ளனர். ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் பங்கேற்பது குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அதேவேளையில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு செல்லப்போவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். ராமர் கோயில் திறப்பு விழாவை புறக்கணிக்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி முடிவு செய்திருப்பதாக செய்திகள் பரவின.

ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர், யாருக்கெல்லாம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோ அவர்கள் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ராமர் கோயில் விஷயத்தில் பாஜக அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஜாய் நகரில் நேற்று பொதுநிகழ்ச்சியில் உரையாற்றிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மக்களை மத அடிப்படையில் பிரிப்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்தார்.

அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து ஒற்றுமை குறித்து பேசும் விழாக்களை நம்புவதாக தெரிவித்துள்ள அவர், பாஜக நீதிமன்ற உத்தரவின் பேரில் ராமர் கோயில் திறப்பு விழாவை நடத்துவதாக கூறியுள்ளார். மக்களவை தேர்தலுக்கு முன்னதாக ராமர் கோயில் தொடக்க விழாவின் மூலம் பாஜக வித்தைக்காட்டி வருவதாகவும் செல்வி மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். ராமர் கோயில் திறப்பு விழா ஏற்பாடுகளை பார்க்கும் போது பாஜக பான்சர் செய்யும் நிகழ்வு போல உள்ளதென ராஜஸ்தான் மாநில முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராமரை பாஜக வேட்பாளராக மட்டும் தான் இன்னும் அறிவிக்கவில்லை என சிவசேனா விமர்சித்த நிலையில், குடமுழுக்கு விவகாரம் சூடுபிடிக்கிறது.

The post சூடுபிடிக்கும் கும்பாபிஷேக விவகாரம்!: பகவான் ராமரை பா.ஜ.க. அரசியல்வாதியாக்கிவிட்டது.. எதிர்க்கட்சிகள் சாடல்..!! appeared first on Dinakaran.

Tags : Kumbabhishekam ,Bhagwan ,Ramrai ,BJP ,Delhi ,Bhagwan Rama ,Ram ,Ayodhya, Uttar Pradesh ,Modi ,
× RELATED தேவங்குடி கோதண்ட ராமசுவாமி கோயில் கும்பாபிஷேகம்